தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



தூத்துக்குடியில் அமைந்துள்ள இத்திருத்தலம் பக்தர்களால் சிறப்பாக வழிபடப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட காலம் கடந்தும் திருப்பணிகள் முழுமையாக நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெறாத நிலை தொடர்வதாக இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஐந்து கருட சேவை உள்ளிட்ட முக்கிய வைபவங்கள் நடைபெறாமல் இருப்பது பக்தர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



இதுதொடர்பாக இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



அந்த மனுவில், “ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை விரைந்து நிறைவு செய்து, கும்பாபிஷேக விழாவை நடத்திட அமைச்சர் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.



மேலும், கும்பாபிஷேகம் நடைபெற்றால் கோவிலில் நடைபெறும் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் முக்கிய திருவிழாக்கள் மீண்டும் சிறப்புடன் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



“பத்து ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டும்” என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.