ரகசிய வீடியோ, ஆடியோ இருந்ததாகக் கூறப்படும் செல்போனை கைப்பற்ற திட்டம்; மற்றொரு நிர்வாகியை போலீசார் தீவிரமாகத் தேடல்
தூத்துக்குடி: ஆறுமுகநேரி அருகே தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகியின் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரில், நாடகமாடி செல்போனை பறிக்க உதவியதாகக் கூறப்படும் அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரோஹிணி (35). த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஆறுமுகநேரி–அடைக்கலாபுரம் சாலையில் மொபட்டில் நின்றபடி, ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் சிபாஸ் (28) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மொபட்டில் வைக்கப்பட்டிருந்த ரோஹிணியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியதாகவும், அவரைப் பிடிப்பது போல் சிபாஸ் சென்ற நிலையில், அந்த நபர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோஹிணி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட் (44) என்பவருக்கும் ரோஹிணிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கட்சியில் பொறுப்பு வாங்கித் தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டுவந்ததாகவும், இருவரின் பழக்கம் தொடர்பான சில தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் ரோஹிணியின் செல்போனில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பதிவுகள் வெளியில் வெளியாகக்கூடும் என்ற அச்சத்தில் செல்போனை கைப்பற்ற ரூஸ்வெல்ட் திட்டமிட்டதாகவும், இதற்காக சிபாஸின் உதவியை நாடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சிபாஸ் தனது நண்பரான உடன்குடி புனிதராஜை பயன்படுத்தி செல்போனை பறிக்கும் வகையில் நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிபாஸை போலீசார் கைது செய்தனர். செல்போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் புனிதராஜ் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே புனிதராஜிடம் இருந்து செல்போனை பெற்றுக்கொண்டு தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் த.வெ.க. நிர்வாகி ரூஸ்வெல்ட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரை கைது செய்த பின்னரே செல்போனில் இருந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தொடர்பான முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செல்போன் பறிப்பு சம்பவத்தில் கட்சியைச் சேர்ந்தவர்களே சதித்திட்டம் தீட்டி செயல்பட்டதாக கூறப்படும் விவகாரம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.