தமிழக அரசின் விதிமுறைகளை மீறி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு வழங்கப்பட்டுள்ள அரசு காரில் சைரன் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு,
விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு வாகனங்களில் சைரன் மற்றும் ஒலி எழுப்பும் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு கார்களில் சைரன் பொருத்தக்கூடாது என்றும், அமைச்சர்களின் பாதுகாப்புப் பணிக்காக உடன் வரும் காவல்துறை வாகனங்களில் மட்டுமே தேவையான சைரன் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத் தமிழக அமைச் சரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள காரில் சைரன் பொருத்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“அரசு விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான்”
அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு காரில் சைரன் பொருத்தப்பட்டிருப்பது உண்மை எனில், அது அரசு விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும் என்றும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசு உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை உடனடியாக ஆய்வு செய்து, அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு வழங்கப்பட்டுள்ள அரசு காரில் விதிமுறைகளுக்கு மாறாக சைரன் பொருத்தப் பட்டிருந்தால் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அரசு வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.