ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையினருக்கு அரசு வழங்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகள் முறையாக கிடைக்கவில்லை என்றும், குறிப்பாக சிறு, நடுத்தர, குறு பத்திரிகையாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.
இந்திய பத்திரிகைத் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசின் அங்கீகாரத்துடன் நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறையினருக்கு மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் இதுவரை ஆட்சி செய்த அரசுகள் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை, பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு செய்தித்துறை இயக்குநர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிலும் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக 2025ஆம் ஆண்டில் அடையாள அட்டை மற்றும் பேருந்து பயண அட்டை உள்ளிட்டவற்றை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னைகளால் பல்வேறு மாவட்டங்களில் சிறு, நடுத்தர மற்றும் குறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் செயல்படும் குழுக்களில் சிலர் விருப்பு, வெறுப்புடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறியதாவது:
“இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுக்குரிய அடையாள அட்டை மற்றும் பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும்.
ஆனால், 2025ஆம் ஆண்டு சில குழுக்களில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி, சிறு, நடுத்தர, குறு பத்திரிகையாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூணை பாதுகாக்கிறோம் என்று கூறும் தமிழக அரசு, ஊடகத்துறையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அரசின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஊடகத்துறையினர் மட்டும் தேவையில்லையா? இந்த பாரபட்ச நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகளை முறையாக வழங்க வேண்டும்” என்றார். மேலும், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மானிய விலை வீட்டுமனை பட்டா கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, அப்போது பத்திரிகையாளர் மன்றத் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஸ், இணைச் செயலாளர் ஜாய்சன் உள்ளிட்டோர் முயற்சியால் பத்திரிகையாளர் களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு வழித்தடம் அமைக்கப்பட்டு, அதற்கான பத்திரப் பதிவு மற்றும் ஆவணங்கள் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரியிடம் நேரில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் கடந்தும், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், செய்தித்துறை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பத்திரிகையாளர் களுக்கு வழங்க வேண்டிய அடையாள அட்டை, பேருந்து பயண அட்டை, வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த சலுகைகளையும் பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“பத்திரிகையாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வீட்டுமனை கோரிக்கைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.