தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை பாகம்பரியாளுடன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ஜலதுர்க்கை அம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து ஸ்ரீ ஜலதுர்க்கை அம்பிகைக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.



அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு 5004 வளையல்கள் மற்றும் பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் ஸ்ரீ ஜலதுர்க்கை அம்பிகை காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.



இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் நெய் தீபம் மற்றும் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி அம்மனை பிரார்த்தனை செய்தனர்.



விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர் செல்வம், ஸ்ரீ ஜலதுர்க்கை அம்பிகை டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.