தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி 4-வது நாளாக கையெழுத்திட்டார்.



இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது பெண்கள் தெரிவித்ததாக கூறப்படும் பாலியல் புகார்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.



அவர் கூறுகையில், “பெண்கள் பெரும்பாலானோர் தவெக கட்சிக்கு வாக்களித் திருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பையும், சுய உரிமையையும் பாதுகாக்கும் வகையில் ஆட்சி இருக்க வேண்டும். தவெக பொறுப்பேற்றது முதல் நேற்று வரை சுமார் 213 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் 99 சதவீத வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.



மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் கூறப்பட்டதாகவும், கோவில்பட்டியில் பள்ளி மாணவி தொடர்பான வழக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



“பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை முக்கியமாக கருதுபவர்கள். ஒரு பெண் அலங்கோலமாக கண்ணீர் மல்க நிற்கும் நிலையில், அங்கு அமைச்சர், எம்.எல்.ஏ. என யாரும் செல்லவில்லை. முதலமைச்சர் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை கண்டிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.




தவெக பிரமுகர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் ஒருவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளதாகவும் மார்க்கண்டேயன் கூறினார். “ஒரு பெண்ணின் கண்ணீர் துளிகள் இந்த ஆட்சியை கரைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.



ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவியா?



நடிகர் ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு “நோ கமெண்ட்ஸ்” என்று மார்க்கண்டேயன் பதிலளித்தார்.



திமுக–பாஜக கூட்டணி குறித்த கேள்வி



திமுகவும் பாஜகவும் நேரடியாக கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த மார்க்கண்டேயன், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் விரட்டப்பட வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்.