கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே மரிமங்கலத்தில் வசித்து வந்த அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவரும் தங்களது மாடு காணாமல் போனதால் வனப்பகுதியில் தேடி சென்றுள்ளனர். இரவு நேரமானதால் வனப்பகுதியில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



மூவரும் வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும், அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருந்து தப்பிக்க வனத் துறையினர் முயற்சிக் கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



அவர்கள் குற்றம் செய்திருந்தால், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்ல வனத் துறையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது? எனவே, உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால செலவுகளை கர்நாடக அரசு ஏற்க வேண்டும்.



மூன்று தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து நிரந்தரப் பணியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.