தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், தூத்துக்குடி பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜான் செல்வம் தலைமை தாங்கினார். எட்டயபுரம் முதுநிலை வருவாய் ஆய்வாளரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான பால்ராஜ் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக ஏஞ்சலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 2-வது பொறியாளரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான ராகுல் மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரருமான ஆர்லாண்டோ ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே அருட்சகோதரர் யேசுதாசன் நினைவு கால்பந்தாட்டப் போட்டி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக விளையாடிய வ.உ.சி. பள்ளி, கோவில்பட்டி அணியும், பியர்ல்ஸ் பள்ளி, ஆறுமுகனேரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் பியர்ல்ஸ் பள்ளி அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் கைப்பற்றியது.



முதலிடம் பெற்ற பியர்ல்ஸ் பள்ளி அணிக்கு சகோதரர் யேசுதாசன் நினைவு கோப்பையுடன் ரூ.15,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற வ.உ.சி. பள்ளி, கோவில்பட்டி அணிக்கு தாமஸ் மஸ்கர்னாஸ் மற்றும் சம்மனசு அம்மாள் மஸ்கர்னாஸ் நினைவாக ரூ.7,000 பரிசுத்தொகையும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.



விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இருதயராஜ் மஸ்கர்னாஸ், இயக்குநர் பெர்டினான்ட், உதவி இயக்குநர்கள் ஜான்பால், ராபர்ட், செயலாளர் ஜெனாப், பொருளாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



விழாவில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.