ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி மாதம் 2-ஆம் தேதி, ஆகஸ்ட் 17-ஆம் தேதி திங்கள்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை, அபிஷேகம், மகா யாகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.



உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்து விளங்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மகா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை வெகு சிறப்பாக நடைபெற்றன.



ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.



மதியம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.