தூத்துக்குடி பி அண்ட் டி காலணி 12-வது தெரு மேற்கு பகுதியில், விளையாட்டு மைதானம் அருகே ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 431-வது வார மரம் நடும் நிகழ்ச்சியும், 10-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.



ஆல்கன் டிரஸ்ட் நிறுவனர் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



அப்போது அவர் பேசுகையில், “வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். நாட்டிற்கு தேவையான மழை வளத்தை பொழியச் செய்யவும், மாசு இல்லாத மாநகராட்சிப் பகுதியை உருவாக்கவும் அனைவரும் முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும்” என்றார்.



நிகழ்ச்சியில் தாசில்தார் செல்வக்குமார், தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெயராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.