தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 5-வது நெய்தல் கலைத் திருவிழா, பொதுமக்களின் பேராதரவுடன் நிறைவடைந்தது. தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் முன்னெடுப்பில் கடந்த 14-ம் தேதி தொடங்கிய இவ்விழா 16-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.



நிறைவு நாள் நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ., வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, நபார்டு வங்கி அதிகாரிகள் சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.



நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசுகையில், “தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். புதிய நிகழ்வுகளையும், புதிய கலைஞர்களையும் கொண்டு வரும்போது பார்வை யாளர்களின் கைதட்டலும் ஆர்வமும், அவர்கள் அந்தக் கலைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கைதட்டல் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.
தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் பங்கேற்றுள்ள தாகவும், அவர்களின் கலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தூத்துக்குடி மக்களின் ஆதரவு ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



மேலும், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக அரங்குகளில் வைக்கப் பட்டிருந்ததாகவும், அனைத்து கடைகளையும் பார்வையிட்டு வியாபாரம் குறித்து கேட்டறிந்தபோது மக்களின் ஆதரவுடன் விற்பனை சிறப்பாக நடைபெற்றது தெரியவந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கனிமொழி எம்.பி. கூறினார். மூன்று நாட்களாக நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் நெய்தல் விழா சிறப்பாக மெருகூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 20 வயது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததாகவும், மண்ணின் கலைகள் அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனிமொழி எம்.பி.யின் நோக்கம் நிறைவேறி வருவதாகவும் கூறினார்.



இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் மண்ணின் கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்குழு, உவரி களியல் குழு, ஸ்டார் ஜிக்காட்ட கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன் குஜராத்தைச் சேர்ந்த சித்தி கோமா நடனமும் நடைபெற்றது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் அறிந்து ரசிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



மூன்று நாட்களிலும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக நிறைவு நாள் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.



நிகழ்ச்சியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வ.உ.சி. கல்லூரி நிர்வாகிகள், நபார்டு வங்கி அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரசாந்த், சனிக்கிழமை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.



கீதாஜீவன், ஜெகன் பெரியசாமிக்கு கனிமொழி பாராட்டு



நெய்தல் கலைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, நபார்டு வங்கி அதிகாரிகள், ஊடகத் துறையினர், காவல்துறையினர், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்தார்.



நாட்டுப்புறக் கலைகள், மண் சார்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.



“தூத்துக்குடியையும் கடலையும் போல நெய்தல் விழாவையும் மக்களையும் பிரிக்க முடியாது”



மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “தூத்துக்குடியையும் கடலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல நெய்தல் நிகழ்ச்சியையும் மக்களையும் பிரிக்க முடியாது. இரண்டு வயது குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் நெய்தல் விழாவை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்ததை நேரடியாக பார்த்தேன்” என்றார்.



நெய்தல் விழாவை முன்னெடுத்த கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் கொண்டு சென்ற ஊடகத் துறையினர், பல்வேறு அரசுத்துறையினர் மற்றும் விழாவுக்கு முழுமையான ஆதரவு அளித்த பொதுமக்கள் அனைவருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.



மூன்று நாட்கள் நடைபெற்ற நெய்தல் கலைத் திருவிழா, தூத்துக்குடி மக்களின் பேராதரவுடன் பாரம்பரிய கலைகளையும் கலாச் சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பாக நிறைவடைந்தது.