“மதுவை படிப்படியாகக் குறைப்போம் என்று கூறியவர்கள், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மதுவின் மூலம் ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என தாக்கல் செய்திருப்பது வேதனை அளிக்கிறது” என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கூறினார்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் 4-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டப்பேரவை நடைபெறும் நாட்களைத் தவிர்த்து தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி, மார்க்கண்டேயன் நேற்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டார். தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் அவர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், திமுக, பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, “தேர்தல் நிலைப்பாடு என்பது தலைவர் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார். தலைவர் மிகச் சரியான முடிவை எடுப்பார்” என்றார்.
காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்
காவிரி நீர் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், “காவிரி என்பது தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம். காவிரி பாசனப் பகுதிகளில் சுமார் 7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் காய்ந்து பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் தீவிரமாக உள்ளது. அரசு நீதிமன்றத்தை நாடி, விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும்.
வேளாண்மையையும் விவசாயிகளையும் காப்பதோடு, மக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் ஆலோ சனைகளையும் கேட்க வேண்டும்” என்றார்.
“மதுவை குறைப்போம் என்றவர்கள் ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் என்கிறார்கள்!”
ஆன்லைன் மது விற்பனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மார்க்கண்டேயன், “750 மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய தவெக அரசு, மதுவை படிப்படியாகக் குறைப்போம் என்று சொன்னவர்கள், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மதுவின் மூலம் ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று தாக்கல் செய்துள்ளனர்.
மதுவின் மூலம் ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் வருகிறது என்றால், போதையை ஒழிப்பதற்காக ஆட்சி அமைப்போம் என்று கூறியவர்கள், இளைஞர்களை போதையில் இருந்து மீட்போம் என்று சொன்னவர்கள், தற்போது மதுவை இளைஞர்களின் பாதைக்கு கொண்டு செல்வதாகவே தெரிகிறது.
இளைஞர்களையும், விவசாயிகளையும், வருங்கால சந்ததியினரையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவை படிப்படியாகக் குறைத்து, இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வருமானம் கிடைக்க பல்வேறு வழிகளை உருவாக்க முடியும்.
இத்தனை வழிகள் இருந்தும் மதுவை மட்டும் திறந்து வைத்து ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் ஈட்டுவோம் என்று கூறுவது எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது” என்றார்.
“பதவி கொடுப்பதும் கையூட்டு பெறுவதும் ஒன்றுதான்”
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் கட்சித் தலைவர் நன்றாக செயல்படுகிறார் என்றுதான் வாக்கு கேட்கிறோம். ஆனால் வாக்கு வாங்கிய ஒரு மாதத்திலேயே அடுத்த கட்சிக்குத் தாவுகிறார்கள் என்றால், சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் யார் விலைக்கு வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஏதோ ஒரு விஷயம் நடக்கிறது. பணம் கொடுப்பதும் ஒன்றுதான், பதவி கொடுப்பதும் ஒன்றுதான். ஏதோ ஒரு வழியில் ஏதாவது கொடுக்கிறார்கள் என்றால், அதனை கையூட்டு பெறுவதாகத்தான் கருத முடியும். இதனை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று மார்க்கண்டேயன் கூறினார்.