தூத்துக்குடியில் தந்தையை இழந்ததால் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ரூ.32,500 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு, அவரது கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கோமதியம்மாளின் மகள், கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். தொடர்ந்து 11-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்ற நிலையில், மாணவியின் தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இதனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை பாதிக்கப்பட்டதுடன், பள்ளிக் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி தனது படிப்பைத் தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பங்காரு அம்மா பக்தர்கள், மாணவியின் கல்வி பாதியில் நின்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, 11-ம் வகுப்பு படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் மாணவிக்கு ரூ.32,500 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருஞானம், கல்வி செய்திகள் நிறுவனர் பொன் பலவேசராஜா உள்ளிட்ட பங்காரு அம்மா பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாத மாணவிகளுக்கு உதவும் வகையிலும் பங்காரு அம்மா பக்தர்கள் நலக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை இழந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பாதியில் நின்ற மாணவியின் கல்வியை மீண்டும் தொடரச் செய்த இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.