தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள இனிகோ நகர் கடற்கரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக எடை கொண்ட நண்டு மற்றும் சுவை மிகுந்த இறால் கிடைக்கும் முக்கியமான கடல் பகுதியாக இருந்து வந்தது. குறிப்பாக இப்பகுதியில் பிடிக்கப்படும் நண்டு மற்றும் இறாலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைத்ததால், ஏராளமான மீனவர்கள் அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை பெற்றுவந்தனர்.



இனிகோ நகர் கடற்கரை பகுதியில் 2 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட நண்டுகள் கிடைத்து வந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு பிடிக்கப்படும் நண்டுகளுக்கு தனி வரவேற்பு இருந்ததுடன், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கிச் செல்லும் அளவுக்கு அதன் சுவையும் தரமும் இருந்ததாக கூறப்படுகிறது.



கழிவு நீரால் பாதிப்பு? இந்நிலையில், தூத்துக்குடி கடலோரப் பகுதியில் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் கடல் பகுதியில் கலப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இனிகோ நகர் கடற்கரை, அனல் மின் நிலையங்களின் பின்புறப் பகுதியில் அமைந்துள்ளதால், கழிவு நீர் மற்றும் சாம்பல் கழிவுகளால் இப்பகுதி கடல் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.



கடலில் சாம்பல் கழிவுகள் படிவதால், கடல்பகுதி சிமெண்ட் தளம் போன்று மாறி வருவதாகவும், இதன் காரணமாக நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்து தற்போது முற்றிலும் அழியும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.



8 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நண்டு மற்றும் இறால் பிடித்து வந்தோம். குறிப்பாக இங்கு கிடைக்கும் நண்டுகள் அதிக எடை கொண்டதாகவும், அதிக விலைக்கு விற்பனையாகும் வகையிலும் இருந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் நன்றாக இருந்தது.



ஆனால் தற்போது அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீரால் நண்டு, இறால் உள்ளிட்ட உயிரினங்கள் கிடைப்பது முற்றிலும் குறைந்து விட்டது. இனிகோ நகர் கடற்கரை முதல் முயல் தீவு வரையிலான கடல் பகுதியில் சாம்பல் கழிவுகள் படிந்து, கடல் பகுதி சிமெண்ட் தளம் போன்று காணப்படுகிறது” என்றார்.



இறால் பிடிக்க ஏர்வாடி செல்லும் மீனவர்கள் மேலும், “இனிகோ நகர் கடற்கரையில் நண்டு, இறால் கிடைக்காததால் தற்போது இறால் பிடிப்பதற்காக ஏர்வாடி கடல் பகுதிக்கு சென்று வருகிறோம். ஒரு சில மீனவர்கள் மட்டுமே இனிகோ நகர் பகுதியில் ஓரளவுக்கு கிடைக்கும் நண்டுகளை பிடித்து வருகின்றனர்.



அரசு அதிகாரிகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனல் மின் நிலையங்களில் இருந்து கழிவு நீர் கடலில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் பெயரளவுக்கு படகில் சென்று கடல் பகுதியை பார்வையிட்டு ஒரு மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்று விடுகின்றனர். முறையான ஆய்வு நடைபெறுவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.



முறையான ஆய்வு நடத்த கோரிக்கை அனல் மின் நிலையங்களில் இருந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக கழிவு நீர் அல்லது சாம்பல் கலந்த கழிவு நீர் கடலில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், கடல் உயிரினங்களுக்கும் மீனவர்களின் வாழ் வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுகள் கடலில் கலப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.



மேலும், இனிகோ நகர் முதல் முயல் தீவு வரையிலான கடல் பகுதியில் சாம்பல் கழிவுகள் படிந்துள்ளதா, கடல் நீரின் தரம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பது குறித்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் அழிவு தொடர்ந்தால், எதிர்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இனிகோ நகர் கடற்கரை மற்றும் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும். அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் விதிமுறைகளுக்கு புறம்பாக கடலில் கலக்கப்படுகிறதா என்பதை கண்டறிந்து,



விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இந்த விவகாரத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, உயர்மட்ட அதிகாரிகளை கொண்ட குழுவை உடனடியாக தூத்துக்குடிக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.