தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பிரதான நீர்வழித்தடமான பக்கிள் ஓடையின் முகத்து வாரத்தை தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அவர் கூறியதாவது:



தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டுகளிலும் 2,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று தேவையற்ற கழிவுப் பொருட்களை நேரடியாக சேகரித்து வருகின்றனர். தினசரி சுமார் 180 டன் வரை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.



மக்கும் கழிவுகள் உரம் தயாரிப்பதற்காகவும், மக்காத கழிவுகள், பிளாஸ்டிக், தொழில்நுட்ப மற்றும் மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவை முறையாகப் பிரிக்கப்பட்டு தருவைகுளம் குப்பைக் கிடங்கு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை முழுமையாகப் பேணுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



பொதுமக்கள் தேவையற்ற கழிவுப் பொருட்களை கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் பக்கிள் ஓடைகளில் கொட்டாமல், வீடுகளுக்கு நேரடியாக வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சிலர் கழிவுகளை நீர்வழித்தடங்களில் கொட்டுவதால் மழைக் காலங்களில் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபடும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்க பொதுமக்கள் மாநகராட்சிக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.



பக்கிள் ஓடை மற்றும் அதனுடன் இணைந்த கழிவுநீர் வழித்தடங்கள் மூலம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கழிவுகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது. அந்தக் கழிவுகள் கடலுக்குள் செல்வதால் மீன் உற்பத்தி மட்டுமின்றி கடல்வளமும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேவையற்ற கழிவுகள் மற்றும் தேக்கங்களை அகற்றி, நீரோட்டம் தடையின்றி கடலுக்குச் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



மேலும் மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மண் அகற்றுதல், தூர்வாருதல் மற்றும் சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மழையின் தாக்கம் எந்த வகையில் இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.



அனைத்து வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



ஆய்வின்போது மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவிந்திரன், பகுதி அணி அமைப்பாளர் எமல்டன், வட்டப் பிரதிநிதி மார்ஷல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.