தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அழைப்பு வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விழாவில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேசிய தகவலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.
அப்போது, இந்த பள்ளியில் 220 மாணவர்கள் படிப்பதாக கேள்விப்பட்டதாக அவர் கூறிய நிலையில், அருகில் இருந்தவர்கள் 720 மாணவர்கள் என தெரிவித்ததைத் தொடர்ந்து, 720 மாணவர்கள் படிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டு மட்டும் 200 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், 200 மாணவர்கள் எந்த அடிப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து விழா மேடையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், முதலமைச்சர் ஜோசப் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மாணவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றும், உண்மையான ஜனநாயகனை சட்டப் பேரவையில் நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடுமையாக உழைத்தால், நேர்மையாக இருந்தால், திட்டமிட்டு செயல்பட்டால் முதலமைச்சராக முடியும் என்பதற்கு முதலமைச்சர் உதாரணம் எனவும் அவர் பேசினார்.