தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக 2,300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,300-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், வாகனங்களை மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், வாகனங்களை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் செல்லும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், வாகனங்களில் வைக்கப்படும் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன நிறுத்துமிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், மாதாந்திர மருந்துகள் மற்றும் மருத்துவச் சீட்டுகள் வழங்கப்படும் பிரிவில் பணிபுரியும் சில செவிலியர்கள் நோயாளிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள் வதாகவும் புகார் எழுந்துள்ளது. நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே மருத்துவமனையில் கழிப்பறை, லிப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்து வருகின்றனர். எனவே, மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், நோயாளிகளிடம் மருத்துவப் பணியாளர்கள் மனித நேயத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதை மருத்து வமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் புகார்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நோயாளிகளின் குறைகளை தீர்க்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.