தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாடு (ABC) மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டங்களை முறையாக செயல் படுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, மாநகரப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணிக்காக சுகாதாரப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார் வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.



இக்கணக்கெடுப்புப் பணியானது ‘வேர்ல்ட் வெட்டரினரி சர்வீஸ்’ மற்றும் ‘டாக்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்’ ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரவு சேகரிப்பு மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து காமராஜ் கல்லூரி மாணவர்கள் தன்னார் வலர்களாகப் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.



பயிற்சி முகாமை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாடு (ABC) அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



மேலும், தெருநாய்கள் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா கேட்டுக்கொண்டார்.