தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலை வகித்தார். ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், “சினிமாவில் சாதனை நாயகராக இருந்து வந்த முதலமைச்சர் விஜய், தமிழகம் பல்வேறு வகைகளில் சீரழிந்து செல்வதையும், இளம் தலைமுறையினர் சீரழிக்கப் படுவதையும் பார்த்து, அவர்களைப் பாதுகாக்கவும், மக்களின் நலனை காக்கவும் அரசியலுக்கு வந்துள்ளார். இது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்டரை மாதங்களில் மக்களை சந்தித்து, தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் விஜயின் சாதனையைப் போல் இந்தியாவில் வேறு எவரும் செய்ததில்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. அதற்கேற்ப என்னை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்போது என்னை அழைத்து, ‘வேட்பாளராக நிற்கிறாய்... ஜெயிக்கிறாய் நண்பா, ஜெயித்து விடு... கப்பு முக்கியம் நண்பா’ என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் இதயங்களில் முதலமைச்சர் விஜய் நிறைந்திருக்கிறார். செல்போனில் கேம் விளையாடி, ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினரையும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்க்க வைத்து, அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளச் செய்து சமூக சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 100 நாட்களில் அவர் செய்துள்ள சாதனைகள், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பதற்கான வலிமையை அவருக்கு பெற்றுத் தந்துள்ளன. அவர் வழிவிட்டால் மட்டுமே வேறு எவரும் வர முடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் முகமது இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டோர் பேசினர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முழுமையான வெற்றி பெறுவது முக்கியம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கிஷோர் தலைமை வகித்தார். ஜே.கே.ஆர். முருகன், மாவட்ட இணை செயலாளர் கோல்டன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், எஸ்.டி.ஆர். விஜயசீலன், வக்கீல் வாரியார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் மற்றும் மகளிர் அணியினர், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.