சென்னையில் உலக நாட்டுப்புறவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சகா.மா. சங்கருக்கு நாட்டுப்புறக் கலைப் பணிக்கான பாராட்டு விருது வழங்கப்பட்டது.
உலக நாட்டுப்புறவியல் தினத்தை முன்னிட்டு சென்னை MSSW-யில் உள்ள K.N. ராஜா அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வி, கலைப் பண்பாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களுக்கு விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில், ‘கலையும் கல்வியும்’ என்ற நோக்கில் கிராமிய கலைப் பயணத்தை மேற்கொண்டு வரும் முனைவர் சகா.மா. சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
கிராமியக் கலைக்கான பொதுவான புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் சிறப்பாகச் செயல்பட்டதற்கும், அந்தப் பாடத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமியக் கலைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பங்களித்ததற்கும் அவருக்கு இந்தப் பாராட்டு வழங்கப்பட்டது.
மேலும், ‘எதிர்கால தலைமுறைக்கு இந்தக் கலையை எப்படி கொண்டு செல்ல வேண்டும்? – சிறகடிக்கும் சிந்தனை கலை உரை’ என்ற தலைப்பில் முனைவர் சகா.மா. சங்கர் மேடையில் சிறப்புரையாற்றினார்.
விழாவில் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரி ஹேமநாதன், அரசு அதிகாரிகள், கலைமாமணி விருதாளர்கள், கலை விருது பெற்றவர்கள், மாணவ கலைஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை பேராசிரியர் காளீஸ்வரன், உமா ராணி, மாற்று ஊடக மையத் தலைவர் சாக்கன் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழா நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சகா கலைக்குழுவின் கலைப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மற்றும் அனைத்து மாவட்ட கலைச் சொந்தங்களுக்கும் முனைவர் சகா.மா. சங்கர் நன்றி தெரிவித்தார்.