தூத்துக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செயலாளர் ராமர் தேர்தல் ஆணையராகவும், தென்காசி மாவட்ட தலைவர் சிவஞானம் துணை தேர்தல் ஆணையராகவும் இருந்து தேர்தலை நடத்தினர். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களின் ஆதரவுடன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாவட்ட தலைவராக முத்தையா, செயலாளராக கண்ணன், பொருளாளராக ரகுநாதன் உள்ளிட்ட மொத்தம் 25 பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நன்றி கூட்டம் நடைபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள பல்வேறு குளறுபடிகளை அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் பாபு சிவராஜ், ஆசிரியர் சங்கரலிங்கம், ஆசிரியர் ராபர்ட் கிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.