தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, ELTAI-ன் “இந்தியா வாசிப்பு இயக்கம்” வாசகர் மன்றத்துடன் இணைந்து, “புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்” என்ற தலைப்பிலான அறிமுக நிகழ்ச்சியை ஆகஸ்ட் 22ஆம் தேதி ஜூபிலி அரங்கில் நடத்தியது.
நிகழ்வை முனைவர் வி. டார்த்தி கேத்ரின், முனைவர் எம். ஹெர்மினா மற்றும் முனைவர் எம். மரியா ஆக்சிலியா ஜோசி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் பி. செரீனா மார்கரெட் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும் முன்னாள் துறைத் தலைவருமான, ELTAI தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான முனைவர் பி. ஜூலைஹா ஷகீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அருந்ததி ராயின் Mother Mary Comes to Me மற்றும் பானு முஷ்டாக்கின் Heart Lamp ஆகிய படைப்புகளை மையமாகக் கொண்டு, இலக்கியப் படைப்புகளை திறனாய்வு செய்து விமர்சித்து மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விளக்கினார்.
இந்நிகழ்வில் சுமார் 210 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி முனைவர் எஸ். குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம். எஸ். எழிலரசி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஏ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் கல்லூரிப் பாடல் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.