தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
மாநகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாநகரம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திடீர் ஆய்வில், 60 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.2,600 அபராதம் விதிக் கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் 1,510 கிலோ எடையிலான, ரூ.2 லட்சம் சந்தை மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அபராதமாக ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் முழுவதும் இந்நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் கள ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.