தூத்துக்குடி மாநகராட்சி போல்டன்புரம் 1வது தெரு தொடர்ச்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டின்றி இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கத்தை சீரமைத்து, இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பகுதி கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பல்வேறு பணிகள் தாமதமானதால் பொதுமக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.



2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர், மக்கள் பிரதிநிதிகள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற ஜெகன் பெரியசாமி, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் நடைபெறும் பணிகளை சுழற்சி முறையில் நேரில் ஆய்வு செய்து, பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.



இந்நிலையில், போல்டன்புரம் 1வது தெரு தொடர்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கம், கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே கொரோனா தொற்று பரவியதால் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. கொரோனா காலம் முடிந்த பின்னரும் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், மாநகராட்சி சுகாதார மைய அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.



இதனால், அந்த பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்நோக்கு கூட்ட அரங்கத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து, அரங்கத்தை சீரமைத்து ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, அரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி அதிகாரிகளுடன் சென்று பல்நோக்கு கூட்ட அரங்கத்தை நேரில் ஆய்வு செய்தார்.



அப்போது, அரங்கில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்குமாறும், மின்விளக்குகள், மின்விசிறிகள் பொருத்துதல், குடிநீர் இணைப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அனைத்து பணிகளையும் தாமதமின்றி முடித்து, ஆறு நாட்களுக்குள் அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.



இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் மீண்டும் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார்.



இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், “ஆறு ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த இந்த அரங்கத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தோம். தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று, உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள மேயருக்கு நன்றி” என்று தெரிவித்தனர்.



அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் எனது முதல் பணி. முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். மக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் தேவையான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பொதுமக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த பல்நோக்கு கூட்ட அரங்கத்தையும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.



ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் லெனின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.