தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கைப்பேசி பறிப்பு சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாவட்ட கழக செயலாளரின் அலுவலகத்திற்கு நேரில் வந்த S. ரோகினி, தனது முந்தைய புகாரிலும் ஊடக பேட்டியிலும் சிலரது பெயர்களை தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாக தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி கடிதம் வழங்கியுள்ளார்.



கடந்த 26.06.2026 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் S. ரோகினியின் கைப்பேசி பறித்துச் செல்லப்பட்டது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்கு எண் 599/2026 பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.



கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மற்றும் சட்ட விதிகளின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இன்னும் பிடிபடாமல் இருக்கும் குற்றவாளியை கைது செய்து, பறிக்கப்பட்ட கைப்பேசியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கடந்த 13.08.2026 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் S. ரோகினி மீண்டும் புகார் மனு அளித்திருந்தார். தொடர்ந்து அவர் அளித்த ஊடக பேட்டியில், மாவட்ட கழக செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு அமைச்சர் உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகளின் பெயர்களை தவறுதலாக குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த பேட்டி சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது.



இதையடுத்து, 14.08.2026 அன்று தவறான தகவல்களை பரப்பும் வகையிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 18.08.2026 அன்று மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்த S. ரோகினி, 13.08.2026 அன்று தான் அளித்த புகார் மனுவில் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியினர் சிலரது பெயர்களை, சிலரின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக தவறாக குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.



மேலும், தனது ஊடக பேட்டியிலும் மாவட்ட கழக செயலாளர் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்து கடிதம் வழங்கினார். தான் வேண்டுமென்றே அவ்வாறு கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.



மேலும், காவல்துறையினரிடம் பேசி, இதுவரை பிடிபடாமல் இருக்கும் குற்றவாளியை விரைந்து கைது செய்து, தனது பறிக்கப்பட்ட கைப்பேசியை மீட்டுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



S. ரோகினி வழங்கிய கடிதத்தை மாவட்ட கழக செயலாளர் பெற்றுக்கொண்டு, கழக பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோரிடம் அவரை நேரில் அழைத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தேவையற்ற சர்ச்சைகளில் கவனம் செலுத்தாமல், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை இலக்காக கொண்டு கழகப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் TVA. பிரைட்டர் BABL கேட்டுக்கொண்டுள்ளார்.