தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக கட்டுமானப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனிதநேயத்துடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி வருகின்றனர்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி கல்விக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், அதன்பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணி களுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
பாளையங்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் பயனடைந்த பலர் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பழைய அண்ணா பேருந்து நிலையத்திலும் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி டூவிபுரத்தில் பிரதான நூலகம் செயல்பட்டு வருகிறது. தனசேகரன் நகரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. "நம்முடைய காலத்தை மட்டுமல்லாமல், அடுத்து வரக்கூடிய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் சிந்தித்து செயல்பட வேண்டும்" என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஏற்ப, மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்கால தலைமுறையினரை கல்வி மற்றும் அறிவாற்றல் மூலம் முன்னேற்றும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், குழாய் ஆய்வாளர் பாலு, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், பாலன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.