திமுக ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்வதுடன், தவெக ஆட்சியில் நடைபெறும் வேதனைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, வார்டு வாரியாக கழகப் பணிகளை மேற்கொள்வது, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் கீதாஜீவன் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கலைஞர் 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை வழங்கினார். அவரது ஆட்சியின் மூலம் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நன்மைகளைப் பெற்றனர். மாநில உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய பெருமையும் கலைஞருக்கு உண்டு. சினிமா, எழுத்து, அரசியல் என அனைத்து துறைகளிலும் அவர் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவரது வழியில் கொள்கை உறுதியுடன், தடம் மாறாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய சவாலாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் மக்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு, அவர்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு, மீளவிட்டானில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் மட்டுமே என்ற பெருமை உள்ளது.
பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், கல்வி உதவித்தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு துறைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருவதாக ஒன்றிய அரசின் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. குழந்தை இறப்பு விகிதம் குறைந்ததற்காக தமிழகத்திற்கு ஐநா சபை விருது வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் கோடி மதிப்பில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலும் டைடல் பார்க், பர்னிச்சர் பூங்கா, கார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வெம்பூர், லிங்கம்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சாலைகள் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஒன்றிய அளவில் 6.5 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், தமிழகம் 9.6 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உயர்கல்வியிலும் 47 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ரூ.138 கோடி மதிப்பில் உயர்சிகிச்சைக்கான கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் கிடந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகள் கனிமொழி எம்.பி.யின் முயற்சியால் வேகமடைந் துள்ளன. தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்.
அதேபோல், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு, விமான நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரவு நேர விமான சேவையும் தொடங்கியுள்ளது. துறைமுகப் பகுதியில் புதிய தொழில்கள் வரவுள்ளன. தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2.25 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மருத்துவர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சுயஉதவிக் குழுக்களையும் தொடங்கி பயன்பெற அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் தவெக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் வேதனைகளையும் எடுத்துக்கூற வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட தேவையற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவுகிறது. இதுகுறித்து ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். அதற்காக ஒவ்வொரு வார்டு பகுதியிலும் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை அனைவரும் இணைந்து தீர்க்க வேண்டும். கழக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்றி தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று கீதாஜீவன் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சோமபாண்டியன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, கருப்பசாமி, சுரேஷ், சிங்கராஜ், பத்மாவதி, மனோ, கவுன்சிலர் ரெக்ஸ்லின், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், செந்தில்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.