தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா அலகிற்கான நில எடுப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், நில உரிமையாளர்கள் அல்லாதவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டுள்ளதாகவும் கூறி, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜு மகாஜன் இ.ஆ.ப. அவர்களிடம் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் சு.பாபு புகார் மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மேல்தளத்தில் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா நில எடுப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாகவும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் திரு. நாகராஜன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நில எடுப்பு தொடர்பான பட்டா, பத்திரப்பதிவு மற்றும் இதர முக்கிய ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, நில உரிமையாளர்கள் அல்லாத சிலருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



மேலும், நில உரிமை இருப்பது போன்ற போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நில எடுப்பு இழப்பீட்டுத் தொகை தொடர்பாக பேரம் பேசப்பட்டதாகவும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த 31.07.2026 அன்று தனியார் நிறுவன ஊழியர்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, திரு. நாகராஜன் மற்றும் சில வட்டாட்சியர்களை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவிலும் புகார் மனுக்கள் அளித்துள்ளதாகவும், அவை நிலுவையில் இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு. நாகராஜன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து இதே அலகில் பணியாற்றி வருவதால், அவரது பணிக்காலத்தில் வெம்பூர் சிப்காட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நில எடுப்பு தொடர்பான அனைத்து கோப்புகள், பட்டா ஆவணங்கள், பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட விவரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



குறிப்பாக, வெம்பூர் வருவாய் கிராமத்தில் புல எண் 377/2B1 மற்றும் 377/2B2 தொடர்பான நில உரிமை மற்றும் விற்பனை ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலம் திரு. ராஜேந்திர பிரசாத் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், வில்லங்கச் சான்றிதழிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ள மனுதாரர், அதேநேரத்தில் நிலத்தை விற்ற நபரான ராஜீ என்பவரின் வாரிசுகளுக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.



மேலும், நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பிரபாகரன், த/பெ. ராதாகிருஷ்ணன் என்ற பெயர் இடம்பெற்றிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில எடுப்பு தொடர்பான ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், போலியான நில உரிமையாளர்களை உருவாக்கி, அவர்களின் பெயரில் பல லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.



மேலும், போலி நில உரிமையாளர்களை உருவாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, கடந்த 06.08.2026 அன்று மாசார்பட்டி காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்தப் புகார் தொடர்பாக 07.08.2026 அன்று விசாரணை நடைபெற்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எனவே, கடந்த இரண்டரை ஆண்டுகளில் திரு. நாகராஜன் பணியாற்றிய காலகட்டத்தில் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நில எடுப்பு நடவடிக்கைகளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நில உரிமை, பத்திரப்பதிவு, பட்டா, வாரிசு சான்றுகள் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அத்துடன், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவும் இணைந்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் சு.பாபு தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.



இந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று, உண்மை நிலை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதே மனுதாரரின் முக்கிய கோரிக்கையாகும்.