தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.



முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களைப் பார்வையிட்டு, உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நெல்லை முபாரக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பள நிலங்கள், 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பின்னர், நமது முன்னோர்களால் தங்களது சொந்தச் செலவிலும் கடும் உடலுழைப்பாலும் சீரமைக்கப் பட்டு உப்பளங்களாக மாற்றப்பட்டவை. கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உப்பு உற்பத்தியை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை அழித்து, அந்த நிலங்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது மிகப்பெரிய அநீதியாகும்.
உப்பளங்கள் கையகப்படுத்தப் பட்டால் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் தமிழகத்திலும், இந்திய அளவிலும் உப்புத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.



மேலும், உப்பு உற்பத்தியை மட்டுமே நம்பி வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சில்லறை மற்றும் மொத்த வணிகர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும், மழைக்காலங்களில் வடிகாலாக பயன்படும் மதிகெட்டான் ஓடை பகுதிகளும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும்.



எனவே, கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். உப்பளங்கள் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் நிலையில், ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வீதம் அரசுக்கு நியாயமான குத்தகைத் தொகையைச் செலுத்த உப்பு உற்பத்தி யாளர்கள் தயாராக உள்ளனர்.



இதனை ஏற்று, உப்பு உற்பத்தியாளர்களுக்கு நில உரிமையையோ அல்லது நீண்டகால குத்தகை உரிமையையோ வழங்கி உப்பு உற்பத்தி மற்றும் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



நிகழ்ச்சியில் உப்பு உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், பால்ராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, செயலாளர் முகம்மது உமர், நிர்வாகிகள் நிசார், அப்துல் அஜீஸ், தொகுதித் தலைவர்கள் காதர் உசேன், செயலாளர் ரியாஸ் அஹமது, அப்துல்லாஹ், பவுஸர் அமீர், எஸ்டிடியூ மாவட்டத் தலைவர் குலசை தாஹிர், மாவட்ட துணைத் தலைவர் ஷேக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.