தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலாளர் சிஸ்டர் பாத்திமா ராணி லூயிஸ், முதல்வர் சிஸ்டர் எம். எஸ். ரூபா மற்றும் துணை முதல்வர் திருமதி மதுரவள்ளி ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அத்தப்பூ கோலம் (பூக்களம்) போட்டியில் மாணவிகள் வண்ண மலர்களைக் கொண்டு அழகிய பூக்கோலங்களை வடிவமைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், கேரள பாரம்பரிய உணவுத் தயாரிப்பு போட்டியில் ஓண சத்யா முறையிலான பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டதுடன், அனைவரும் அவற்றை சுவைத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஃபேஷன் பரேட் நிகழ்ச்சியில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடைகளான கசவு சேலை மற்றும் வேட்டி அணிந்து அணிவகுத்து அசத்தினர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஒருங்கிணைந்து ஓணம் திருநாளை உற்சாகத் துடனும், கேரள பாரம்பரிய கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.