தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடும் “Viksit Bharat Yuva Connect – Sports Edition” நிகழ்ச்சி வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.



இதுகுறித்து மை பாரத் கேந்திரா தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மதுமிதா மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் கே.பானுமதி ஆகியோர் கூட்டாக செய்தி யாளர்களை சந்தித்தனர்.



அப்போது அவர்கள் கூறியதாவது:



புகழ்பெற்ற ஹாக்கி வீரரும் தேசிய முன்னோடியுமான மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் பங்கேற்பு, விளையாட்டு வளர்ச்சி மற்றும் தேச கட்டமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், “Viksit Bharat Yuva Connect – Sports Edition” நிகழ்ச்சி ஆகஸ்டு 27-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.



நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் சுமார் 1,600 இடங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 8 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.



தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைப்பதுடன், இளைஞர்களின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து கலந்துரையாட உள்ளார்.



பிரதமரின் கலந்துரை யாடலுக்குப் பின்னர், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



பேட்டியின்போது காமராஜ் கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர் அருணாச்சல ராஜன், டாக்டர் செந்தில், தூத்துக்குடி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.