தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசு திட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது.
இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அசன் தலைமையில் மக்கள் நல கூட்டமைப்பினர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு சலுகைகள் மற்றும் நிலங்களைப் பெறும் நிறுவனங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் குறைந்தபட்சம் 90 சதவீத பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களிடம் குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத் தகுதி இல்லாதபட்சத்தில், அவர்களுக்கு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி, பயிற்சிக்குப் பின்னர் அந்தப் பணிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தமிழர் விடியல் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் சந்தனராஜ் பாண்டியன், திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாத், புரட்சி பாரதம் இளைஞரணி முன்னணி மாவட்டச் செயலாளர் சுஜித், தமிழ்புலிகள் மண்டலச் செயலாளர் தாஸ், ஆதித்தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் சுரேஷ் வேலன், தமிழர் முன்னேற்றக் கழகச் செயலாளர் ராஜா, பெரியார் திராவிடக் கழக மாவட்டச் செயலாளர் மைக்கேல், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன், பொருளாளர் அகமது அலி, தொகுதிச் செயலாளர் இப்ராஹிம், இளைஞரணி துணைச் செயலாளர் பாட்ஷா, ஊடகப் பிரிவு செயலாளர் யூசுப் மெகா அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.