தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். சிலர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை என்பது தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இளமையில் சிறைக்குச் சென்றவர்கள் முதுமை அடைந்த பின்னரும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படாதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து கேள்விக் குறியாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல்நிலை மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக் கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
“இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா?” என்ற கேள்விக்கு தமிழக அரசு உரிய பதில் அளிப்பதுடன், நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்களின் விடுதலை தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.