தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள பழமையான தெப்பக்குளம், பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும், தெப்பத் திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும், 365 நாளும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு மகிழும் வகையில் தெப்பக்குளம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் ஆன்மிகப் பகுதியாக விளங்கும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர், வைகுண்டபதி பெருமாள், மாரியம்மன், முத்தாரம்மன், மேலூர் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் அமைக்கப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக் கையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது எதிர்பாராதவிதமாக தெப்பக்குளத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, பழமையான தன்மை மாறாமல் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் முழுமையாக சீரமைக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தெப்பக்குளம் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தெப்பக்குளத்தின் தென் புறத்தில் மின்சார வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்ததுடன், இரண்டு மின் கம்பங்களும் இருந்தன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன், தெப்பத் திருவிழாவின் போது தெப்பக்குளத்தை பார்வை யிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரும், இரண்டு மின் கம்பங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தெப்பக்குளத்தின் பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செயற்கையாக அமைக்கப் பட்டாலும் இயற்கையான நீர்வீழ்ச்சியைப் போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது. இரவிலும் தெப்பக்குளம் அழகாக காட்சியளிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
மேலும், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் நவீன வசதிகளும், சிறுவர், சிறுமியர்கள் பொழுதுபோக்கும் வகையில் சிறிய அளவிலான ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தெப்பத் திருவிழாவின் போது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் 365 நாளும் பொதுமக்கள் தெப்பக் குளத்திற்கு வந்து பார்வையிட்டு மகிழும் வகையில் இந்தப் பகுதி சிறந்த பொழுதுபோக்கு மற்றும் பார்வையிடும் இடமாக மாற்றப்படும். சுமார் இரண்டு மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தெப்பக்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.