தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 2,007 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பூஜையில், கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப நலன் வேண்டியும், திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விழாவில் பங்கேற்ற 2,007 சுமங்கலிப் பெண்களுக்கும் தேங்காய், பழம், புடவை, மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் வழங்கப்பட்டன. பெண்கள் அனைவரும் வெள்ளிச் செம்பில் தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து தங்களது திருமாங்கல்யத்தை அணிந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காளிராஜ், செயலாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப் பாளர் வெண்ணிமாலை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.