தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் அருகே நீண்ட காலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வந்த பழமையான ரயிலடி விநாயகர் கோவில், நேற்று (20-08-2026) அதிகாலை ரயில்வே நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் இடிக்கப்படுவதை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் அதிகாலையிலேயே அங்கு திரண்டு, கோவிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், காவல்துறை பாதுகாப்புடன் ரயில்வே நிர்வாகம் கோவிலை முழுமையாக இடித்ததாக கூறப்படுகிறது.
ரயில்வே துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே கோவில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி மற்றும் பரிவார அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனை கண்டித்தும், கோவில் இடிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதே இடத்தில் மீண்டும் விநாயகர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து முன்னணி மற்றும் அதன் பரிவார அமைப்புகள் சார்பில் நாளை (22-08-2026) மாலை குரும்பூர் பஜாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட, மாநில மற்றும் அனைத்து அணி, பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவில் இடிப்பு விவகாரம் தொடர்பாக நாளைய கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.