தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டில் உள்ள அறைகளை முழுமையாக ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சில கட்டிடங்களில் கதவுகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும் காணப்படுவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கட்டிடங்களின் பராமரிப்பில் காணப்படும் இதுபோன்ற குறைபாடுகள் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், எனவே அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் துறைசார் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். விரிசல் மற்றும் சேதமடைந்த கட்டிடப் பகுதிகளை சீரமைப்பதுடன், பழுதடைந்த கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.



மேலும், கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து நிபுணர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அறிக்கையை வெளியிட வேண்டும். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு வலியுறுத்தியுள்ளது.