தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தனபாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் அமைப் பதற்காக நிலம் கையகப் படுத்தும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தி யாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு சென்று தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தங்களது கோரிக் கைகளை எடுத்துரைத்தனர்.
அப்போது, உப்பளங்களை பாதுகாக்க வேண்டும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக் கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய உப்பளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக எடுத் துரைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், இதுகுறித்து முதல்வரிடம் கலந்து பேசிய பின்னர் உரிய தகவலை தெரிவிப்பதாக கூறினார்.
இந்த சந்திப்பின்போது உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.