தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பெற்றோர்கள் பார்வைக்கு தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் (DEO) அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வகுப்பு வாரியாக தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கல்வி என்பது வணிகம் அல்ல; அது மாணவர்களின் உரிமை. எனவே, அதிகப்படியான கல்விக் கட்டணங்களால் பெற்றோர்களுக்கு ஏற்படும் அநியாயமான பொருளாதாரச் சுமையை அரசு தடுத்து, அனைத்து பள்ளிகளிலும் கட்டண வசூல் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விக்னேஷ், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது ஜான், தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அஹமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதி செயலாளர் கண்ணன், சமூக ஆர்வலர் சுடலை, தாயக மக்கள் கட்சி இப்ராஹிம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.