தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி பகுதிகளில் குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் இயந்திரக் குழிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பிரதான மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை ஆணையர் ப்ரியங்கா ஆய்வு செய்தார்.
மேலும், மழைநீர் வடிகால்களில் காணப்படும் மணல் மற்றும் சகதிகளை அகற்றும் பணிகளையும், மழைநீரை வெளியேற்றும் உந்து நிலையங்களின் செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். மழை வெள்ளநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் மற்றும் டீசல் மோட்டார்களின் இயக்க நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
வரவுள்ள மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் ப்ரியங்கா அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, வடிகால்களில் உள்ள மணல், சகதி உள்ளிட்ட அடைப்புகளை முழுமையாக அகற்றி, மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.