தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டுகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சுழற்சி முறையில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பாத்திமாநகர் ஜார்ஜ் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள், புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே உள்ள வடிகால்களை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதியில் உள்ள நுண்ணுயிர் உர செயலாக்க மையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அப்பகுதி சாலையோர மின்கம்பங்களில் தனியார் பங்களிப்புடன் விளக்குகள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,
“மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற பிறகு 60 வார்டுகளிலும் எவ்வித பாரபட்சமின்றி மாமன்ற உறுப்பினர்களின் கோரிக் கைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்” என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உர செயலாக்க மையம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கப்பட்டது. 24, 25, 40, 46, 47 ஆகிய 5 வார்டுகளில் இருந்து 17 வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் பொதுமக்களின் தேவையற்ற கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.
அவற்றில் உரம் தயாரிக்க தேவையான காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத கழிவுகளான கோபேக், மின்னணு கழிவுகள் உள்ளிட்டவை உடனுக்குடன் தருவைகுளம் உரக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதன் மூலம் பலரும் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த உர செயலாக்க மையம் அமைந்துள்ள பகுதியில் பல்வேறு வகையான செடி, கொடி, மரங்கள் வளர்க்கப்பட்டு காற்றோட்டமான, சுகாதாரமான சூழல் பராமரிக்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் பணியாற்று வதற்கும், உணவு அருந்துவதற்கும் தேவையான வசதிகளுடன் இருப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கழிவு மேலாண்மை மற்றும் உர செயலாக்க மையங்கள் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன. மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்குவதுடன், பொது மக்களின் சுகாதாரமான வாழ்க்கையை உறுதி செய்வதே மாநகராட்சி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகும்.
“வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற கொள்கையுடன் அனைவரும் செயல்பட வேண்டும். தூய்மையான, சுகாதாரமான சூழலில் பொதுமக்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், வட்டச் செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பர் பிரபாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.