தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெரு மெயின் ரோடு மற்றும் குறுக்குச் சந்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஆக.10) காலை 11 மணியளவில் கவன ஈர்ப்பு மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தையாபுரம் தெற்கு தெரு மெயின் ரோடு மற்றும் குறுக்குச் சந்து பாதைகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தெருவிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் தீயணைப்பு வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ரோடு அருகே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் தீயில் முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளதாகவும், அவசர மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குறுக்குச் சந்து பாதையில் கடந்த 9 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதாகவும், மெயின் ரோடு மற்றும் குறுக்குச் சந்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவசர வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி மா. மாரிச்செல்வம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஏ.டி. பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் மு. மணிகண்டன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் த. மகேந்திரன், மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் எஸ். ஜெரினா பானு, மாநகர் மாவட்ட உரிமை மீட்புக்குழு செயலாளர் கே. அருள்தாஸ், 53-வது வார்டு குடியிருப்பைச் சேர்ந்த எஸ். முகமது காட்டுபா, கனி ராஜ், புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் துணைச் செயலாளர் ஆர். துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மா. மாரிச்செல்வம், “முத்தையாபுரம் தெற்கு தெரு மற்றும் குறுக்குச் சந்து பாதையில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். 9 ஆண்டுகளாக குறுக்குச் சந்து பாதையில் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும், பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.