தூத்துக்குடி காயல்பட்டினம் வாவு வஜிஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ் சங்கமம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், சுயதொழில் முனைவோர், மருத்துவத் துறையினர், பசுமைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட சாதனையாளர்களுக்கு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.



விழாவிற்கு கல்லூரித் தலைவர் செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் மொகுதஸீம், துணைச் செயலாளர் அகமது இஸ்ராக், தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குநர் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சங்கமம் விருதுகள் அறக்கட்டளையின் நிறுவனர் தாமோதரன் வரவேற் புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரஹ்மத் அமீனா பேகம் தொடக்கவுரையாற்றினார்.



விழாவில் 214 அதிகாரங்களில் 2,140 குறள் வெண்பாக்களைப் படைத்த தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் தாரகை சுகந்தீனா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரகாஷ்குமார், கலைவாணன், யோகேஸ்ராஜ், காமராஜ், வெள்ளைச்சாமி, மலைப்பாண்டி, முனைவர் சஜிதா, அய்யர், சுரபி செல்வராஜ், சாமுவேல் டேவிட், முனைவர் பிரபு மாறச்சன், முத்துக்குமார், மரிய குசேலன், நாஞ்சில் விஷ்ணு, ஜெசி, லதா, கீதா, முன்னாள் யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன், ஓட்டப்பந்தய வீராங்கனை மேரி ஜாய், முனைவர் யோஸ்வா, கில்பட்தாஸ், மேரி, சிவகுமார், சங்கர், முத்துமாரி, வனிதா, பத்மா, தனலெட்சுமி, ஜெயக்கனி, ரோஸ்மேரி உள்ளிட்டோருக்கு சுகந்தீனா விருதுகளை வழங்கி கௌரவித்தார்.



மேலும் இயற்கையைப் பாதுகாத்து பசுமைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கல்லூரியில் பயிலும் 220 மாணவிகளுக்கு ‘பசுமை இளம் துளிர்’ என்ற சிறப்புப் பெயர் சூட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பணியில் சிறப்பாகப் பங்களித்து வரும் சுகந்தீனாவுக்கு ‘குறளமுத பேரரசி’ என்ற மாபெரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



பட்டிமன்றப் பேச்சாளர் திவ்யபாரதி, சுரபி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளங்கலை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சத்தியபாமா நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கலந்து கொண்டனர்.