தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக வல்லநாடு ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது திடீரென ஆற்றுக்குள் இறங்கிய அவர், அங்கு கிடைக்கும் நீரின் அளவை கம்பை பயன்படுத்தி ஆழம் பார்த்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் மற்றும் 4-வது குடிநீர் திட்டத்தின் பிரதான வால்வில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதற்கான சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.



இந்நிலையில் போதிய மழை இல்லாததால் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.



இதனைத் தொடர்ந்து வல்லநாடு கலியாவூர் பம்பிங் ஸ்டேஷனுக்கு நேரில் சென்ற மேயர், அங்கு கிடைத்து வரும் நீரின் அளவு குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆற்றுப்படுகையில் நீர்வரத்தை அதிகரிக்க ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் ஆழமாக தோண்டும் பணியை பார்வையிட்டார்.



அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி திடீரென ஆற்றுக்குள் இறங்கினார். இதனைப் பார்த்த அதிகாரிகள் முதலில் பதற்றமடைந்த நிலையில், அவர்களும் உடனடியாக ஆற்றுக்குள் சென்றனர். அங்கு கிடைக்கும் நீரின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக மேயர் அருகில் இருந்த கம்பை எடுத்து ஆற்றில் இறக்கி நீரின் ஆழத்தை நேரில் பார்த்தார்.



ஆற்றில் உள்ள நீரின் அளவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்த மேயர், மழைக்காலம் தொடங்கும் வரை தற்போதுள்ள நீர்மட்டம் போதாது என்றும், மேலும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் ஆற்றுப்படுகையை ஆழமாக தோண்டி கூடுதல் நீரை சேகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் மீண்டும் பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்ற மேயர், அங்கு பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் நீரின் அளவு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்டார்.



82 எம்.எல்.டி. நீர் கிடைத்தால் சீரான விநியோகம்



இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு இதுவரை எந்தவிதமான தடையும் இல்லாமல் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பிரதான குழாய் மற்றும் வால்வில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.



வல்லநாட்டில் இருந்து தற்போது மாநகராட்சிக்கு 50 சதவீத அளவிற்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலைக்குள் 100 சதவீத குடிநீர் வரத்து கிடைக்கும். திங்கட்கிழமை மாலை முதல் மாநகராட்சி முழுவதும் வழக்கம்போல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.



ஆற்றுப்படுகையில் நீரின் அளவு குறைவாக இருப்பதால் பொதுமக்கள் தற்போது கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை வீணாக்காமல், குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு மோட்டார் இயக்கப்பட்டபோது, ஆற்றுப்படுகையில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் பம்பிங் மோட்டாரை முழுமையாக இயக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஆற்றுப்படுகையில் இருந்து 32 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.




தற்போது ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் ஆற்றுப்படுகை தொடர்ந்து ஆழப்படுத்தப்பட்டு வருவதால் 55 எம்.எல்.டி. தண்ணீர் பம்பிங் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை மாலைக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேவையான 82 எம்.எல்.டி. முழு கொள்ளளவு தண்ணீரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி சீராக விநியோகம் செய்யப்படும்” என்றார்.



இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் செல்வம், குழாய் ஆய்வாளர்கள் பாலு, குமார், மாநகராட்சி பணிக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



மாநகராட்சி முழுவதும் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க உத்தரவு



மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கும் சென்று குடிநீர் வரும் அளவை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு வருகிறார். எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு குடிநீர் வழங்க வேண்டும் என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



பம்பிங் ஸ்டேஷனில் ஆற்றுப்படுகைக்குள் தண்ணீர் எவ்வாறு வந்து சேர்கிறது என்பதை நேரில் பார்வையிடுவதற்காக, பம்பிங் ஸ்டேஷனின் மேல் பகுதியில் இருந்து கீழ்ப்பகுதிக்கு செல்லும் பாதையில் உள்ள ஏணி வழியாக திடீரென இறங்கி ஆற்றுப்படுகையின் கீழ்ப்பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.