தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் சுழற்சி முறையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடை மற்றும் ஆண்டாள் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், “மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான திட்டங்கள் பாரபட்சமின்றி அனைவரும் பயன்பெறும் வகையில் கிடைக்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை தயாரித்து செயல்படுத்தி வருகின்றனர். பணிகள் நடைபெறும் போது அவற்றை நேரில் ஆய்வு செய்து, தவறுகள் எதுவும் ஏற்படாத வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போதும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், பணிகளை எவ்வாறு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதற்கான ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுக்கான திட்டங்களும், மாநகராட்சியின் செயல்பாடுகளும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறோம்” என்றார்.



ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.