தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது என வக்கீல் ராஜசேகர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் மழைக் காலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் முக்கிய வடிகாலாக பக்கிள் ஓடை உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, பக்கிள் ஓடையை விரிவாக்கம் செய்ய சுமார் ரூ.53 கோடியே 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பக்கிள் ஓடை பணிகள் 20 சதவீதம் கூட நிறைவடையாத நிலையில், மாநகராட்சி ஆணையர் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்து விடும் என தெரிவித்திருப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என வக்கீல் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
2016-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாநகருக்குள் வந்தது. நீர்நிலை தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதும் வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதுபோன்ற வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காகவே பக்கிள் ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 32 மீட்டர் அகலத்தில் இருந்த பக்கிள் ஓடை, ஆக்கிரமிப் புகளால் 26 மீட்டராக குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 6 மீட்டர் அகலப் படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
எஃப்.சி.ஐ. குடோனில் இருந்து திரேஸ்புரம் கடற்கரை வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிக்காக 380 மின்கம்பங்கள், 16 டிரான்ஸ் பார்மர்கள் மாற்றப்படுவதுடன், குடிநீர் பிரதான குழாய்களும் மாற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, இவ்வளவு பணிகள் இருக்கும்போது இரண்டு மாதங்களில் பக்கிள் ஓடை பணிகள் முழுமையாக முடிவடையும் என கூறுவது சாத்தியமற்றது. ஒப்பந்ததாரரே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் பணிகள் முடிவடையும் என தெரிவிப் பதாகவும் அவர் கூறினார்.
மேலும், முத்தம்மாள் காலனி பகுதியில் இருந்து எட்டையாபுரம் சாலையில் இசக்கி அம்மன் கோவில் அருகே செல்லும் ஓடை தூர்வாரப்படாமல், முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை உடனடியாக அகற்றி சீரமைக்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி பகுதியில் இருந்து சி.வ.குளம் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தவறான தகவல்களை தெரிவிப்பதை தவிர்த்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.அ ப்போதுதான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
பக்கிள் ஓடை பணிகள் தரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதுடன், மாநகராட்சி மக்களை எதிர்கால வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி ஆணையர் மேற்கொள்ள வேண்டும். பக்கிள் ஓடையின் மீது மூடுபலகை அமைத்து சாலை அமைத்து, அதனை அழகுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். அதிகாரிகள் ஆட்சி யாளர்களுக்கு சாதகமாக அல்லாமல், மக்கள் நலனை கருத்தில் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வக்கீல் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.