தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், உப்பளங்களை பாதுகாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற மறுக்கப்பட்டதால், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளக்காடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரஞ்சித் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன், யூனியன் பற்றாளர் அருண்கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சங்கரராம சுப்பிரமணியன் வரவேற்று அரசு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கினார்.



அப்போது கோவளம், பசுவந்தனை, தனபாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் சேகர், சின்னராஜ், பாலசுப்ரமணியன், சிவாகர், பாஸ்கர், பிரபாகர், காசி, பாரத் உள்ளிட்டோர், வியாபாரிகள் சங்கத் தலைவர் சின்ன தங்கம், கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்க நிறுவனத் தலைவர் கராத்தே கோகுல் மற்றும் பொதுமக்கள், சிஐடியு தொழிற்சங்கத்தினர் முனியசாமி, முருகன், ஜோதிபாசு, பாஸ்கர் உள்ளிட்டோர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.



அதில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதனை முள்ளக்காடு உப்பளப் பகுதியில் அமைக்காமல் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், உப்பளங்கள் பாதிக்கப்படாத வகையில் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



இந்தக் கோரிக்கையை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கிராம சபை கூட்டம் அரசு திட்டங்கள் மற்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பானது என்றும், இந்தக் கோரிக்கையை தீர்மானமாக வைக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் சலசலப்பு நிலவியதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர்.



தங்களது கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற மறுத்ததை கண்டித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.



இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை பாதுகாக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். உப்பளங்கள் அழிக்கப்பட்டால் உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இதுகுறித்த எங்களது கோரிக்கையை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால், தீர்மானம் வைக்க மறுக்கப்பட்டதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்” என்றனர்.



கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் முள்ளக்காடு மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.