தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, தூத்துக்குடியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. உத்தரவின்படி நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று 1-ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.



ஊர்வலத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கருப்பு பலூன்களை ஏந்தியபடி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தென் இந்தியாவில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.



மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கும் தென் மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்திலும் அநீதி ஏற்படக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இந்த அமைதி ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் தனபால்ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெசின், ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன்பாரத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், பல்வேறு அணி மற்றும் பிரிவு தலைவர்கள், வார்டு தலைவர்கள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.