சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் 7 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு வரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அயன்பர்னர்ஜி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார்.
அவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அயன்பர்னர்ஜி நாடு முழுவதும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 165 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர், தனது பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார்.
தூத்துக்குடி வந்த அவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சார்பில் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவரது பயணத்தின் நோக்கம் குறித்து கேட்டறிந்ததுடன், அவருக்கு டிரஸ்ட் நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி முன்னிலையில், பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் முருங்கை விதைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மரங்கள் மற்றும் பயனுள்ள தாவரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனிநபரின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டிய சமூகப் பொறுப்பு என்றும் எடுத்துரைக்கப்பட்டது. அயன்பர்னர்ஜியின் 7 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துளசி சோசியல் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.