காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் திடீரென அப்பகுதிக்கு வந்து, குடியிருப்புகள் அனுமதியற்ற ஆக்கிரமிப்பு மற்றும் பொது நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன்பு, அவர்களுக்கு மாற்று இடம் அல்லது மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா? என காயல் அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை திடீரென வெளியேற்றினால், அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். எனவே, பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்த பின்னரே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கையை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக காயல் அப்பாஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.